கிணற்றில் தவறி விழுந்து ஐஸ் வியாபாரி சாவு
தென்காசி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஐஸ் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள சாம்பவர்வடகரை மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 65). இவர் சைக்கிளில் வீதிவீதியாக சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். மேலும் சமையல் வேலைக்கும் சென்று வந்தார். நேற்று காலை இவர் சமையல் வேலைக்கு சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சாம்பவர் வடகரையில் இருந்து கம்பிளி செல்லும் சாலையில் ஒரு கிணற்றில் முருகன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து, கிணற்றில் இருந்து அவரது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
சமையல் வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது, கிணற்றில் கால் கழுவ சென்றிருக்கலாம் என்றும், அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாம்பவர்வடகரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து முருகனின் மனைவி கனகம்மாள் சாம்பவர்வடகரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காசிவிசுவநாதன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிணற்றில் ஐஸ் வியாபாரி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story