சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவினர் ஆய்வு


சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 9 March 2022 8:52 AM IST (Updated: 9 March 2022 8:52 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை, அனல் மின் நிலையத்தில் சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

மேட்டூர்:-
மேட்டூர் அணை, அனல் மின் நிலையத்தில் சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வு
தமிழகத்தில் சட்டமன்ற பேரவை பொதுநிறுவனங்கள் குழு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, சேகர், தளபதி, நிவேதா, முருகன், பாலாஜி, மனோகரன், ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று சேலம் வந்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
 அப்போது அவர்கள் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படும் செயல்பாடுகள் குறித்து ஜவ்வரிசி உற்பத்தியாளர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து ஜவ்வரிசியின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அனல்மின் நிலையம்
இந்த ஆய்வின் போது சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவினரிடம், சேகோசர்வ் தொழிலை மேம்படுத்த சேலத்தில் அதற்கென தனியாக பூங்கா அமைக்க வேண்டும், மானிய கடன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவினர் மேட்டூருக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனல் மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மின் உற்பத்தி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். 
மேட்டூர் அணை
பின்னர் அவர்கள் மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் வலது கரை, இடது கரை, ஆய்வு சுரங்கம் மற்றும் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் கார்மேகம், சதாசிவம் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங், பொதுநிறுவனங்கள் குழு சிறப்பு பணி அலுவலர் ராஜா, மேட்டூர் நகராட்சி தலைவர் சந்திரா, குழு அலுவலர் ரவிச்சந்திரன், சார்பு செயலாளர் வளர்வேந்தன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக மேட்டூர் அணைக்கு வந்த குழுவினரை பொதுப்பணித் துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் சிவகுமார், உதவி நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், அணை பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்று அணையை சுற்றி காண்பித்தனர்.
கலந்துரையாடல் கூட்டம்
சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவினர் இன்று (புதன்கிழமை) ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத்தளங்களில் மாசு கட்டுப்பாடு குறித்தும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது.

Next Story