தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு விருது


தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு விருது
x
தினத்தந்தி 10 March 2022 12:00 AM IST (Updated: 9 March 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

நாகை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விருது வழங்கினார்.

நாகப்பட்டினம்:-

நாகை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விருது வழங்கினார்.

மகளிர் தின விழா

நாகை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பயிற்சி மையத்தின் தலைவரும், மாவட்ட கலெக்டருமான அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இயக்குனர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
இந்த மையத்தில் பயிற்சி பெற்று சுயதொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு வெற்றி பெற்ற பெண்மணிக்கான விருதை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு அதிகளவு உள்ளது. கிராமப்புற பெண்கள் முன்னேற்றம் பெற அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதை உணர்ந்து கிராம பகுதியை சேர்ந்த பெண்கள் சுயஉதவிக்குழுவை பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் பெற வழிவகுக்க வேண்டும். 

750 பேருக்கு பயிற்சி

பெண்கள் சாதிக்க வேண்டும் என்பதே உலக மகளிர் தினத்தின் நோக்கம். சமுதாயத்தில் பெண்கள் யாரையும் எதிர்பார்த்து வாழக்கூடாது. தனித்து இருந்தாலும் விழித்திருக்க வேண்டும். நாகை மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தையல், அழகு நிலையம், செல்போன் சர்வீஸ் உள்ளிட்ட 25 வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 
ஒவ்வொரு ஆண்டும் 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், வேலை கிடைப்பதற்கும், சுய தொழில் தொடங்குவதற்கும் உள்ள வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் பயிற்சி மையம் வழங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் பெரும்பாலும் பெண்களே அதிகமாக பயின்று வருவது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story