ஓ.என்.ஜி.சி. ரசாயன கழிவுநீர், விளைநிலங்களில் பரவியது
கோட்டூர் அருகே கமலாபுரம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. ரசாயன கழிவுநீர் விளைநிலங்களில் பரவியதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
கோட்டூர்;
கோட்டூர் அருகே கமலாபுரம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. ரசாயன கழிவுநீர் விளைநிலங்களில் பரவியதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
கச்சா எண்ணய்
விவசாய தொழிலை உயிர் மூச்சாக கொண்டு உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் மூலம் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் பாரதிமூலங்குடி, வெள்ளக்குடி, அடியக்கமங்கலம், கருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் கச்சா எண்ணெய் பரவி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
கழிவுநீர்
கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பனையூர் ஊராட்சி கமலாபுரம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் கச்சா எண்ணெய் எடுத்து வரும் பகுதியில் ரசாயன கழிவுகளை சேமித்து வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக ரசாயன கழிவுகள் சேமித்து வைத்துள்ள குட்டைபோன்ற பகுதி நிரம்பி அக்கழிவுகள் அருகில் இருந்த விவசாய கூலி தொழிலாளியான சுமித்ரா சேகர் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விளைநிலத்தில் பரவியது.
இதனால் நிலத்தின் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கழிவுநீரை அகற்றினாலும் வரும் 10 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மனவேதனையுடன் தெரிவித்தனர்.
நிலத்தடி நீர் மாசு
எனவே மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விவசாயம் செய்யமுடியாத நிலையினை கருத்தில்கொண்டு உரிய இழப்பீடு வழங்குவதோடு, ஓ.என்.ஜி.சி. ரசாயன கழிவு பரவிய நிலத்தில் உள்ள மண்ணை முற்றிலும் மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகைய கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இப்பகுதி மக்கள் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டு பயன்படுத்தி வருவதால் தோல் வியாதி, மூச்சுத்திணறல் முதலான சுவாச கோளாறுகள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. வயலில் கழிவுநீர் கலந்த தகவல் அறிந்து அங்கு சென்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழும் மக்களின் நலன்காக்க வலியுறுத்தியும் ஓ.என்.ஜி.சி. கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியை மூட வலியுறுத்தியும் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
===
Related Tags :
Next Story