தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 March 2022 7:47 PM IST (Updated: 9 March 2022 7:47 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை மாவட்டம் பரப்பாடி பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர் வள்ளியூரில் இருந்து துலுக்கர்பட்டி வழியாக பரப்பாடிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது.
இதன் எதிரொலியாக வள்ளியூரில் இருந்து துலுக்கர்பட்டி வழியாக பரப்பாடிக்கு மீண்டும் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு உள்ளது. கோரிக்ைக நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

பயணிகள் நிழற்கூடம் தேவை 

நாங்குநேரி தாலுகா முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள கோடன்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. அங்கு பயணிகள் அமர்வதற்கு செடிகளுக்கு நடுவே கற்களால் ஆன ெபஞ்ச் மட்டுமே உள்ளது. இதனால் வெயில், மழை காலங்களில் பொதுமக்கள் பஸ் ஏறி செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, ேகாடன்குளத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
கிறிஸ், கோடன்குளம்.

பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கழிப்பறை

திசையன்விளை நகர பஞ்சாயத்து 16-வது வார்டில் உள்ள கழிப்பறை கட்டிடம் சுமார் 8 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் பராமரிப்பற்று கிடக்கிறது. மேலும் கால்நடைகளும் கழிப்பறைக்கு சென்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆகவே, இந்த கழிப்பறை கட்டிடத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஞான பிரகாசி, திசையன்விளை.

ஓடை பாலம் சீரமைக்கப்படுமா? 

மேலப்பாளையம் 44-வது வார்டுக்கு உட்பட்ட குருநாதபுரம் புது தெருவில் ஓடையின் மீது அமைக்கப்பட்ட பாலம் பல மாதங்களாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பக்கிர் முகம்மது லெப்பை, மேலப்பாளையம். 

வழிகாட்டி பலகையால் பயணிகள் குழப்பம்

ராதாபுரம் - விஜயாபதி சாலையில் சுற்றுலா துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் கூத்தன்குழி கடற்கரை என்பவதற்கு பதிலாக கூந்தன்குழி என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் தவறுதலாக உள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

காட்சி பொருளான குடிநீர் தொட்டி 

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிப்பட்டி இந்திரா காலனி செல்லும் ரேஷன் கடை எதிரில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியானது பழுதடைந்து பல மாதங்களாக பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. ஆகவே, இந்த குடிநீர் தொட்டியை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அற்புதஜெகன் பிரகாஷ், வெய்க்காலிப்பட்டி.

முட்செடிகள் அகற்றப்படுமா? 

தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளின் மத்தியில் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் அதிக அளவில் பாம்புகளும் கிடக்கிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி அங்கு முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தன்ராஜ், தூத்துக்குடி.

Next Story