கூடலூர் அருகே வாகனத்தில் அடிபட்டு புனுகுபூனை குட்டி சாவு
கூடலூர்- கோழிக்கோடு சாலையில் வாகனத்தில் அடிபட்டு புனுகுபூனை குட்டிஉயிரிழந்தது. மற்றொரு குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
கூடலூர்
கூடலூர்- கோழிக்கோடு சாலையில் வாகனத்தில் அடிபட்டு புனுகுபூனை குட்டிஉயிரிழந்தது. மற்றொரு குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
ஊருக்குள் வரும் வன விலங்குகள்
கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், சிறுத்தை புலிகள், கரடிகள், மலைப்பாம்புகள், மற்றும் அரிய வகையை சேர்ந்த குரைக்கும் மான், மலை அணில், புனுகு பூனை உள்ளிட்ட சிறு வன உயிரினங்களும் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் காட்டு யானைகள் முதல் சிறு வன உயிரினங்கள் ஊருக்குள் வர தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் கோழி பாலம் என்ற இடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
புனுகுபூனை குட்டி பலி
இந்த கல்லூரிக்கு வழக்கம் போல் மாணவ- மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோழிபாலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்லூரி செல்லும் வழியில் வாகனத்தில் அடிபட்டு புனுகு பூனை குட்டி ஒன்று மிகவும் உடல் நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது.
அதுபோன்று அதே பகுதியில் கழிவுநீர் செல்லும் இடத்தில் மற்றொரு புனுகு பூனை குட்டி சத்தமிட்டவாறு தவித்து கொண்டிருந்தது. இதைக் கண்ட மாணவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கூடலூர் வனச்சரகர் கணேசன், வனக்காப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மற்றொரு குட்டி மீட்பு
பின்னர் பிறந்து 1 மாதம் மட்டுமே ஆன புனுகு பூனை குட்டியை மீட்டு கூடலூர் ஈட்டிமூலா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து அங்கு புனுகு பூனை குட்டியை பத்திரமாக பராமரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனச்சரகர் கணேசன் கூறும்போது, நள்ளிரவில் தாயுடன் புனுகுபூனை குட்டிகள் வந்துள்ளன. அப்போது சாலையை கடக்க முயன்ற போது ஒருகுட்டி வாகனத்தில் அடிபட்டு மிகவும் நசிந்து விட்டது.
மற்றொரு குட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சாலையோரம் தவித்து கொண்டிருந்தது. அதை மீட்டு உள்ளோம். தொடர்ந்து இரவில் அதே பகுதியில் பாதுகாப்பான இடத்தில் குட்டி விடப்படும் என்றார்.
Related Tags :
Next Story