மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள நத்தமாடிபட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 29). இவர், திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கருப்புசாமி தனது மோட்டார் சைக்கிளை பேக்கரி முன்பு நிறுத்தி விட்டு வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் வேலை முடிந்து, பேக்கரிக்கு வெளியே பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, பொன் குணசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் நந்தவனப்பட்டி பாலம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர்கள் திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்த மோகன்ராஜ் (26), ஜி.டி.என். நகரை சேர்ந்த பாலாஜி (22), செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (19) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கருப்புசாமிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.Related Tags :
Next Story