அட்டைப்பெட்டி உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம்
கிராப்ட் காகிதத்தின் விலை மேலும் ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளதால் அட்டைப்பெட்டி உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்
கிராப்ட் காகிதத்தின் விலை மேலும் ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளதால் அட்டைப்பெட்டி உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அட்டைப்பெட்டி உற்பத்தி
பின்னலாடை தொழிலுக்கு அட்டைப்பெட்டி முக்கியமாக விளங்கி வருகிறது. ஆடைகள் தயார் செய்ததும் அவற்றை அட்டைப்பெட்டிகளில் அடைத்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 700 அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு 12 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். நாளொன்றுக்கு 1,000 டன் அட்டைப்பெட்டிகள் உற்பத்தியாகிறது. இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும்.
சமீபகாலமாக அட்டைப்பெட்டி தயாரிப்புக்கு மூலப்பொருளாக விளங்கும் கிராப்ட் காகிதத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது கிராப்ட் காகிதத்தின் விலை டன் ரூ.42 ஆயிரமாகவும், உயர்ரக காகிதத்தின் விலை டன் ரூ.52 ஆயிரமாகவும் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் காகிதத்தின் விலையை 3 முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் உயர்த்தியுள்ளனர். அதாவது டன்னுக்கு ஒரு மாதத்தில் ரூ.6 ஆயிரம் உயர்ந்துள்ளது. கிராப்ட் காகிதத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப வாரந்தோறும் அட்டைப்பெட்டிகளின் விலையை உயர்த்துவது என்று அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்து அறிவித்தனர்.
ரூ.2 ஆயிரம் விலை உயர்வு
இந்தநிலையில் நேற்று கிராப்ட் காகிதத்தின் விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளதாக காகித உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருட்களின் பற்றாக்குறை, வெளிநாட்டில் இருந்து வரும் கழிவு காகிதம் வரி, மற்ற கெமிக்கல், கப்பல் போக்குவரத்து சரியாக இல்லாததால் கப்பலில் வரும் கண்டெய்னர் வாடகை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து அட்டைப்பெட்டி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சிவக்குமார் கூறும்போது, ‘கடந்த மாதம் கிராப்ட் காகிதம் டன்னுக்கு ரூ.6 ஆயிரம் உயர்ந்த நிலையில் இந்த மாத தொடங்கிய நிலையில் இன்று (நேற்று) டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்த்தி அறிவித்து விட்டனர். ஏற்கனவே அட்டைப்பெட்டிகளுக்கான கிராப்ட் காகிதம் சரிவர கிடைக்கவில்லை. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தியும் குறைந்துள்ளதால் அட்டைப்பெட்டி தயாரிப்புக்கான ஆர்டர் குறைந்து விட்டது. அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்களில் நாளொன்றுக்கு 4 மணி நேரமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் வகையிலேயே ஆர்டர் இருக்கிறது.
தொழில் முடங்கும் அபாயம்
இந்தநிலையில் கிராப்ட் காகிதத்தின் விலை மேலும் உயர்வால் வேலையிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்பணமாக கொடுத்தால் மட்டுமே கிராப்ட் காகிதம் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுத்தாலும் காகிதம் கிடைப்பதில் சுணக்கம் நிலவி வருகிறது. இப்படியே சென்றால் அட்டைப்பெட்டி உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்படும்’ என்றார்.
Related Tags :
Next Story