மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம்
கோடைகாலம் தொடங்க உள்ளதால் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யபாமா உத்தரவிட்டார்.
திருப்பூர்
கோடைகாலம் தொடங்க உள்ளதால் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யபாமா உத்தரவிட்டார்.
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்றுகாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யபாமா தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகாமி, மாவட்ட ஊராட்சி செயலாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சமூக நலத்துறை, கனிமவளத்துறை, மாவட்ட வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குடிநீர் வடிகால் வாரியத்துறை, சமூக நலத்திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் துறைகளில் உள்ள நலத்திட்ட விவரங்களை தெரிவித்தனர். அப்போது கவுன்சிலர்கள், துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை எழுத்து பூர்வமாக கொடுத்தால் அனைவரும் அறிய வசதியாக இருக்கும் என்று வேண்டுகோள் வைத்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து துறை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பை நோட்டீசாக அடுத்த கூட்டத்தில வழங்க அதிகாரிகளுக்கு தலைவர் உத்தரவிட்டார்.
தடையின்றி குடிநீர் வினியோகம்
கூட்டத்தில் தலைவர் சத்யபாமா பேசும்போது, ‘கோடைகாலம் தொடங்க உள்ளதால் மாவட்ட மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வழங்குவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு வழங்க வேண்டும்.
ஊராட்சி பள்ளிகளில் மேஜை, பெஞ்சு மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து வழங்கப்பட்டது. அவை தரமானதாக இருப்பதால் அருகே உள்ள மற்ற பள்ளிகளில் இருந்தும் மேஜை, பெஞ்சு வாங்கிக்கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள். கவுன்சிலர்கள் வைக்கும் கோரிக்கையை பெற்று அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். வார்டு பகுதிகளில் நடக்கும் பணிகளை கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும். அதுபோல் தேவைப்படும் பணிகளுக்கான கோரிக்கை விவரங்களை முன்கூட்டியே அளிக்க வேண்டும்’ என்றார்.
சமாளிக்க முடியும்
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது, ‘திருப்பூர் மாவட்டத்தில் 16 கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருமூர்த்தி அணை, அமராவதி ஆறு, பவானி ஆறு ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பூலாங்கிணறு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் சுணக்கம் உள்ளது. இருப்பினும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். 6 மாதங்களுக்குள் முழுவீச்சில் தடையின்றி குடிநீர் வழங்கப்படும். இந்த கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் மாவட்டத்துக்கு வழங்கும் குடிநீர் திட்டத்தில் அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பு இருப்பதால் கோடை காலம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து நிலைமையை சமாளிக்க முடியும்’ என்றனர்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
மாவட்ட ஊராட்சி செயலாளர் மல்லிகா பேசும்போது, ‘நமது மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மேஜை, பெஞ்சு வழங்க இதுவரை அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கவுன்சிலர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் முடிந்த வரை நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். செலவின கணக்குகள் குறித்து தீர்மானம் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதுபோல் நிலுவையில் உள்ள பணி விவரங்களையும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும், மாவட்ட ஊராட்சி தலைவர், பெண் கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதில் ஆண் கவுன்சிலர்கள் பங்கேற்று பெண் கவுன்சிலர்களை வாழ்த்தி பேசினார்கள். இதற்கு பெண் கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story