ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கும் போது விதிமீறல்கள் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை
ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கும் போது விதிமீறல்கள் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை
ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கும் போது விதிமீறல்கள் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ்கள்
உடுமலையில் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ளிட்ட சில இடங்களில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் உள்ளன. உயிருக்குப் போராடும் நோயாளிகள், விபத்துக்குள்ளானவர்கள் ஆகியோரை காப்பாற்றுவதற்காக அழைத்து செல்வதில் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பங்கு முக்கியமானது. அதேநேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலர் தங்களது செல்போன் எண்களை, தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்துள்ளனர். ஏதாவது ஆம்புலன்ஸ் தேவை என்றால் தகவல் கொடுங்கள் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து ஏதாவது நடந்துள்ளதாக தகவல் கிடைத்தால் அங்கு ஆம்புலன்ஸ் செல்கிறது. இதுபோன்ற தகவல் ஓரிரு டிரைவர்களுக்கு, அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் கிடைத்திருக்கும். அப்போது அவர்களும் ஆம்புலன்சுகளை அங்கு ஓட்டி செல்வர். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் செல்பவர்தான், விபத்திற்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர முடியும் என்பதால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சைரனில் ஒலி எழுப்பியபடி மின்னல் வேகத்தில் செல்வது அதிகரித்துள்ளது.
பிரச்சினைகள்
சில நேரங்களில் விபத்து நடந்த இடத்திற்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சென்றடையும்போது டிரைவர்களுக்குள் பிரச்சினை ஏற்படுவதாகக்கூறப்படுகிறது. சைரன் ஒலித்தபடி வேகமாக செல்லும் ஆம்புலன்களின் சத்தத்தை கேட்டு சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அலறியடித்து விலகி ஆம்புலன்சுக்கு வழிவிடுகின்றனர்.
சில நேரங்களில் ஆம்புலன்சுகள், சாலைகளில் வேகமாக செல்லும்போது பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மோதிவிடுமோ என்று பயப்படுகின்றனர். சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள், நோயாளிகள் அல்லது விபத்துக்குள்ளானவர்கள் இல்லாத நிலையிலும் சைரனை ஒலித்தபடி வேகமாக செல்கின்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
போலீசார் அறிவுரை
இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டம் உடுமலை போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கணேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பேசியதாவது:-
நோயாளிகள் மற்றும் விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக அழைத்துவரச்செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சாலையில் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சாலையில் செல்லும் பொதுமக்கள் பயப்படும் வகையில் ஆம்புலன்ஸ்களை இயக்கக்கூடாது. சாலை திருப்பங்களில் கவனமாக செல்ல வேண்டும். மது அருந்தி விட்டு ஆம்புலன்சுகளை ஓட்டக்கூடாது. விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு செல்லும்போது டிரைவர்களுக்குள் போட்டி இருக்கக்கூடாது.
இதுசம்பந்தமாக டிரைவர்கள் ஒருவருக்கொருவர் தகராறு செய்யக்கூடாது. ஆம்புலன்சில் நோயாளிகள் இல்லாத நேரத்தில் ஆம்புலன்சில் சைரன் ஒலி எழுப்பி கொண்டு வேகமாக செல்லக்கூடாது. ஆம்புலன்சுகளை இயக்குவதில் விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்டவாறு இன்ஸ்பெக்டர் பேசினார்.
Related Tags :
Next Story