நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் தின விழா கோலாகல கொண்டாட்டம்


நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் தின விழா கோலாகல கொண்டாட்டம்
x
தினத்தந்தி 9 March 2022 11:47 PM IST (Updated: 9 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல்:
மகளிர் தின விழா
குமாரபாளையம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பிரகாஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சுகந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி கலந்து கொண்டு மகளிருக்கான உரிமைகளையும், மாணவிகளின் ஆரோக்கியத்தை பற்றியும் பேசினார். மேலும் மாணவிகள், அவர்களது தாயார்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, புத்தகம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் ஹெலன், சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. துணை தலைவர் லட்சுமி, ஊராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர். மேலும், ஊராட்சி மன்ற செயலாளர், தூய்மை பணியாளர்கள் பணித்தள பொறுப்பாளர் அனைவரும் ஒரே மாதிரியான சேலை அணிந்து விழாவில் பங்கேற்றனர். குன்னமலை ஊராட்சியில் தலைவர், துணை தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள், பணியாளர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தாயம்மாள் கல்லூரி
ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு குழு சார்பாக, உலக மகளிர் தினம் கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் பிரேம்குமார், முதல்வர் மணிகண்டன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக வக்கீல் மகேஸ்வரி கலந்து கொண்டு பெண்களின் உரிமை, பெண்களின் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழாவில் மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி மகளிர் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் கோமதி, தமிழ் துறை தலைவர் மற்றும் மகளிர் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பாவை கல்வி நிறுவனம்
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் யங் இந்தியன் சேலம் சேப்டர் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக காவேரி மருத்துவமனை டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் தலைவர் திக்சா செங்குட்டுவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெண்கள் தங்களால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை எப்பொழுதும் கொண்டு இருங்கள். தாழ்வு மனப்பான்மையை கைவிடுங்கள். எங்கு முடியாது என்று சொல்ல வேண்டுமோ, அந்த இடத்தில் முடியாது என்று கண்டிப்பாக சொல்ல வேண்டும். பெண்ணடிமை என்பதை சிறிதளவும் ஏற்று கொள்ளக்கூடாது என்றார்.
முன்னதாக யங் இந்தியன் சேலம் சேப்டர் தலைவர் செந்தில் ராஜன் வரவேற்றார். முடிவில் துணை தலைவர் நாகலட்சுமி விக்னேஷ் நன்றி கூறினார். விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துறை தலைவர்கள், மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Next Story