ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு
அறநிலையத்துறை சார்பில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்றது.
பாடாலூர்,
கோவில் நிலங்கள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலங்களை அளவு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி கோட்ட பொறியாளர் கவுதமன் உள்ளிட்ட குழுவினர் செட்டிகுளம் ஊராட்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கற்களை நடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,820 கோவில்கள் உள்ளன. இதில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதனை அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆக்கிரமிப்பு
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்களை கண்டு அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளோம். முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 600 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த ஆய்வின் போது ஆய்வாளர் தமிழரசி, செயல் அலுவலர் ஜெயலதா, தனி தாசில்தார் பிரகாசம், நில அளவையர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story