விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) கே.குமரன் தலைமையில் நடைபெற்றது.
தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பழனிசாமி, மணிகண்டன், அட்மா ஆலோசனைக்குழு தலைவர் சிவக்குமார், சுப்பிரமணி, கேசவன், வரதராஜன், துரைராஜ், பாரதியார் உள்பட பலரும் கலந்துகொண்டு பேசினர்.
வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்த வேண்டும். விவசாய நிலங்களை தவறான முறையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளம், குட்டை, நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை ஏரிகளில் மீன் ஏலத்தை அந்தந்த கிராமங்களில் நடத்த வேண்டும்.
யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
அதைத் தொடர்ந்து கால்நடைத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.
Related Tags :
Next Story