குமரி மீனவர்கள் 26 பேர் உள்பட 41 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக செசல்ஸ் தீவு, இந்தோனேஷியாவில் குமரி மீனவர்கள் 26 பேர் உள்பட 41 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லங்கோடு,
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக செசல்ஸ் தீவு, இந்தோனேஷியாவில் குமரி மீனவர்கள் 26 பேர் உள்பட 41 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மீனவர்கள்
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் தங்கியிருந்து மீன்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் உள்ள துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து வருபவர்கள் அதிகம். இந்தநிலையில் குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த மரிய ஜெசின்தாஸ் என்பவருக்கு சொந்தமான அந்தமான் பதிவெண் கொண்ட விசைப்படகில் குமரியை சேர்ந்த மீனவர்களும், திருவனந்தபுரத்தை சேர்ந்த மீனவர்களும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.
படகு பழுதானது
கடந்த மாதம் 17-ந் தேதி அந்தமானில் இருந்து குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெசின்தாஸ், கோவில் விளாகம் லிபின், பிரபின், மேட்டுவிளை முத்தப்பன், இம்மானுவேல் ஜோஸ் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோமோன், சிஜின் ஸ்டீபன், ஜான் போஸ்கோ ஆகிய 8 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
இந்தோனேஷியா எல்லையான கேம்பல்பட்டி என்னும் கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென படகு பழுதாகி உள்ளது. இதனால் காற்றின் திசைக்கு ஏற்றவாறு படகு சென்றது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தோனேஷியா கடற்படை அந்த விசைப்படகை சுற்றி வளைத்தது.
இந்தோனேஷியாவில் கைது
பின்னர் அவர்களை சிறைபிடித்து அந்த நாட்டின் கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அதே சமயத்தில் மீனவர்கள் விசைப்படகில் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். இதேபோல் கேரள மாநிலத்தில் இருந்து குமரியை சேர்ந்த 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க குமரி மீனவர்கள் உள்பட 33 பேர் செசல்ஸ் தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு;-
செசல்ஸ் தீவில் 33 பேர் சிறைபிடிப்பு
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களான குக்ளின், சுனில், ஜெனிஷ் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் 33 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கடந்த 7-ந் தேதி பலத்த காற்று வீசியதால் இந்த விசைப்படகுகள் திசைமாறி செசல்ஸ் தீவின் எல்லை பகுதிக்குள் சென்றுள்ளது. அப்போது செசல்ஸ் கடற்படையினர் கண்காணித்து அந்த 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட 3 விசைப்படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் 30 மீனவர்களை அங்கேயே தங்கியிருக்க செசல்ஸ் கடற்படை உத்தரவிட்டது. பின்னர் விசைப்படகுக்கு சொந்தமான 3 பேரை மட்டும் கடற்படையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். 33 பேர் சிறைபிடிக்கப்பட்டதில் சின்னத்துறையை சேர்ந்த சுனில், மைக்கேல், வின்சென்ட், பூத்துறையை சேர்ந்த குக்ளின், ஜெனிஸ், இசாக், மில்டன், ராஜ்குமார், ஜாய்கோ, டைகோஸ்டன், சாம்குமார், ஜெரின், ஜெபர்சன், சேவியர், சோஜன், சிபு, சதீஸ், மார்த்தாண்டன் துறையை சேர்ந்த நிக்கோலஸ், அப்சலின், இரவிபுத்தன்துறை சிபு, வள்ளவிளை வினோத் ஆகிய 21 பேர் குமரி மீனவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோக திருவனந்தபுரம், வடமாநிலத்தை சேர்ந்த மீனவர்களும் இதில் அடங்குவர்.
மீட்க கோரிக்கை
இந்த சம்பவம் குமரி மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு செசல்ஸ் தீவு, இந்தோனேஷியாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள குமரியை சேர்ந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி, மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜோஸ்வில்பின் மற்றும் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story