ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 23 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 23 பேர் காயம்
x
தினத்தந்தி 10 March 2022 1:34 AM IST (Updated: 10 March 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

பாலமேடு அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டில் பார்வையாளராக பங்கேற்ற பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

அலங்காநல்லூர்,

பாலமேடு அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டில் பார்வையாளராக பங்கேற்ற பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டியில் சின்னம்மன்கோவில் திருவிழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகிபிரேமளா தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்து கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 
 சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
அதை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு திமிலை பிடித்து அடக்கினர். இதில் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் காளைகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகளையும், டிவி, சைக்கிள், கட்டில், சேர், அண்டா உள்ளிட்ட பாத்திரங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன.முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தனித்தனியே மருத்துவ பரிசோதனை நடந்தது.

அண்ணாமலை பங்கேற்பு

இந்த ஜல்லிக்கட்டில் பார்வையாளராக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் மாடுபிடி வீரர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். பா.ஜனதா புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதியிலிருந்து 702 காளைகள் கலந்து ெகாண்டன. 6 சுற்றுகளாக நடந்த போட்டியில் சீருடைகள் அணிந்த 300 வீரர்கள் தலா 50 பேர் வீதம் கலந்து கொண்டனர். சிறந்த பிடிபடாத மாட்டின் உரிமையாளருக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும், தனித்தனியே இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

23 பேர் காயம்

 ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.அவர்களுக்கு பாலமேடு அரசு மருத்துவமனை குழுவினர் சிகிச்சை அளித்தனர்.இதில் மேல் சிகிச்சைக்காக அலங்காநல்லூர் ராம்குமார் (24) ராஜக்காள்பட்டி சேகர் (27), பார்வையாளரான எர்ரம்பட்டி மாணிக்கம் (15) ஆகிய 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
கூடுதல் துணை சூப்பிரண்டு மணி, துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் உள்பட 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை சத்திரவெள்ளாளப்பட்டி கிராம மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story