நெல்லை சாப்டர் பள்ளிக்கூடம் 3 மாதங்களுக்கு பிறகு திறப்பு


நெல்லை சாப்டர் பள்ளிக்கூடம் 3 மாதங்களுக்கு பிறகு திறப்பு
x
தினத்தந்தி 10 March 2022 1:40 AM IST (Updated: 10 March 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான நெல்லை சாப்டர் பள்ளிக்கூடம் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் பலியானார்கள்.

உதவி கலெக்டர் விசாரணை

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளிக்கூடம் காலவரையின்றி மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், கட்டிட காண்டிராக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அறிக்கை சமர்ப்பிப்பு

உதவி கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பினர்.

அதில் பழமையான கட்டிடங்களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள்  இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் உதவி கலெக்டர் அறிக்கையின்படி பல்வேறு மாற்றங்களை செய்ததுடன், பள்ளியில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டது. தீயணைப்பு துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பல கட்ட ஆய்வு நடத்தி பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

பள்ளிக்கூடம் திறப்பு

சுமார் 3 மாதங்களாக பள்ளிக்கூடம் திறக்காததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறைைய சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையாளர் உத்தரவின்படி நேற்று முதல் சாப்டர் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. 3 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் மாணவர்கள் காலையிலேயே வந்தனர். 

முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. இதனால் நேற்று 6, 8, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) 7, 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு வகுப்பு நடக்கிறது. 

இதற்கிடையே, பள்ளியில் வகுப்பு நடைபெறுவதை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆசிரியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். மேலும், பள்ளியின் புதிய தாளாளராக புஷ்பராஜ், தற்காலிக தலைமை ஆசிரியராக ஜாஸ்மின் ஏஞ்சலோ ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

போராட்டம்

இந்த நிலையில் பள்ளியில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல், அவசரகதியில் திறப்பதாக கூறி இந்து முன்னணியினர் மாவட்ட தலைவர் சிவா, செயலாளர்கள் சுடலை ராஜ், செல்வம் ஆகியோர் தலைமையில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

இந்த சம்பவத்தையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் பள்ளி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



Next Story