6 மணி நேரம் சிலம்பம் சுற்றி 9 மாத கர்ப்பிணி சாதனை


6 மணி நேரம் சிலம்பம் சுற்றி 9 மாத கர்ப்பிணி சாதனை
x
தினத்தந்தி 10 March 2022 1:49 AM IST (Updated: 10 March 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில், 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி 9 மாத கர்ப்பிணி சாதனை படைத்தார். ‘மனதில் தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்’ என்கிறார்.

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில், 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி 9 மாத கர்ப்பிணி சாதனை படைத்தார். ‘மனதில் தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்’ என்கிறார்.  
9 மாத கர்ப்பிணி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி ஷீலாதாஸ் (வயது 29). 
குத்துச்சண்டை, தடகளம், பளு தூக்குதல்,, கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றவர். தேசிய அளவில் வலு தூக்குதல் பிரிவில் சாதனை படைத்து இரும்புப் பெண் பட்டம் பெற்றவர். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சிலம்பம் சுற்றும் போட்டியில் பங்கேற்பு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் உலக சாதனை நிகழ்த்த சிலம்பம் சுற்றும் போட்டி பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் பலர் வந்து இருந்தனர். 9 மாத கர்ப்பிணியான ஷீலாதாஸ்சும் வந்து இருந்தார். அவர் பார்வையாளராக வந்து இருப்பதாக அனைவரும் கருதினர். ஆனால் அவரோ தான் 9 மாத கர்ப்பிணி என்பதையும் பொருட்படுத்தாமல் தானும் சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்து கொள்வதாக கூறினார்.
6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
அவர் கூறியதை கேட்டதும் போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற சிலம்ப வீரர்கள் ஒருகணம் அவர் கூறியதை கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால் ஷீலாதாஸ்சோ தான் போட்டியில் பங்கேற்பது உறுதி என்று கூறி போட்டியில் பங்கேற்றார்.
உலக சாதனைக்காக காலை 6.45 மணிக்கு சிலம்பம் சுற்றத்தொடங்கிய ஷீலாதாஸ் இரட்டை மற்றும் ஒற்றை சிலம்பம் என தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.
நோபல் உலக சாதனை ரஷியன் டைரக்டர் விக்னேஷ் நடுவராக இருந்து சாதனையை பதிவு செய்தார். ெதாடக்க நிகழ்ச்சிக்கு சர்வதேச முதியோர் தடகள வீராங்கனை திலகவதி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் செயலாளர் நெப்போலியன் வரவேற்றார். டாக்டர் லட்சுமி கார்த்திக் முன்னிலை வகித்தார். டாக்டர் குணசேகரன் போட்டிகளை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் சதாசிவம் பரிசுகள் வழங்கினார். 
மன தைரியம் இருந்தால் சாதிக்கலாம்
சிலம்பம் சுற்றி சாதனை படைத்த ஷீலாதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- 
எனக்கு 7 வயது முதல் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டதால் சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தேயை கற்றுக் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று இருக்கிறேன். நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருப்பதால் டாக்டர்களின் முழு ஆலோசனையைப் பெற்று இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டேன். 
உடல் உழைப்பைத்தாண்டி மன தைரியத்தில்தான் என்னால் இந்த சாதனையை செய்ய முடிந்தது. மனதில் தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சி முடிவில் அணைக்காடு சிலம்பக் கூட செயலாளர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

Next Story