மீனவர் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கப்படும்


மீனவர் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கப்படும்
x
தினத்தந்தி 10 March 2022 1:52 AM IST (Updated: 10 March 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் அருகே மீனவர் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அமைதி பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

பேராவூரணி:
சேதுபாவாசத்திரம் அருகே மீனவர் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அமைதி பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்தனர். 
மின் இணைப்பு இல்லை
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை ஊராட்சி கழுமங்குடா ஐஸ்வாடி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் வகித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லை. இங்கு குடியிருந்து வருபவர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மீனவர் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி நாளை (வெள்ளிக்கிழமை) கழுமங்குடா கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 
அமைதி பேச்சுவார்த்தை
இதையடுத்து பேராவூரணி தாசில்தார் சுகுமார், கட்சியினரை அழைத்து நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், மின்வாரிய உதவி பொறியாளர் ஸ்ரீராம், சேதுபாவாசத்திரம் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் சுரேஷ், துணை தாசில்தார் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
அதேபோல கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வீரப்பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, நாகேந்திரன், பெரியண்ணன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
போராட்டம் ஒத்திவைப்பு
இதில் வருகிற 18-ந் தேதிக்குள் கழுமங்குடா ஊராட்சி ஐஸ்வாடி மீனவர் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கட்சியினர் அறிவித்தனர். 

Next Story