நெல்லை அருகே விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
நெல்லை அருகே உள்ள அனைத்தலையூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கககோரி கங்கைகொண்டானில் நேற்று விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ளது அனைத்தலையூர். இந்த பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை கங்கைகொண்டான் பெட்ரோல் பங்க் அருகே சாமியானா பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்கள் ஊரில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகிறோம். அனைத்தலையூர், துறையூர், வடகரை, ஆண்டிப்பட்டி, கீழக்கோட்டை, கைலாசபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு உள்ளோம். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது அறுவடை நடந்து வருவதால் வியாபாரிகள் நெல்லை குறைந்த விலைக்கே கேட்கின்றனர். இதனால் எங்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. ஆனால் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நேரடியாக நெல் கொள்முதல் செய்தால் எங்களுக்கு கிலோவுக்கு ரூ.21.50 கிடைக்கும். எனவே உடனடியாக அனைத்தலையூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. உங்கள் ஊரில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story