சிக்கரசம்பாளையத்தில் பண்ணாரி அம்மன் வீதி உலா; கோலம் போட்டு பெண் பக்தர்கள் வரவேற்றனர்
சிக்கரசம்பாளையத்தில் பண்ணாரி அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது கோலம் போட்டு அம்மனை பெண் பக்தர்கள் வரவேற்றனர்.
சத்தியமங்கலம்
சிக்கரசம்பாளையத்தில் பண்ணாரி அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது கோலம் போட்டு அம்மனை பெண் பக்தர்கள் வரவேற்றனர்.
வீதி உலா
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா நேற்று முன்தினம் அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இரவில் சிறப்பு அலங்காரத்தில் பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் தாரை, தப்பட்டை முழங்க கோவிலில் இருந்து அம்மன் வீதி உலா தொடங்கியது.
சப்பரத்தை பக்தர்கள் தோளில் சுமந்தபடி சிக்கரசம்பாளையத்துக்கு கொண்டு சென்றனர். நேற்று அதிகாலை சிக்கரசம்பாளையத்தை அம்மன் சப்பரம் சென்றடைந்தது. இதையடுத்து அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் சப்பரம் தங்கவைக்கப்பட்டது.
கோலம் போட்டு...
பின்னர் காலை 7 மணி அளவில் அம்மன் வீதி உலா சிக்கரசம்பாளையத்தில் தொடங்கியது. அங்கு வீதி வீதியாக அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பெண் பக்தர்கள் தங்களுடைய வீட்டின் முன் பகுதியை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து மாக்கோலம் போட்டு அம்மனை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தட்டில், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ ஆகியவற்றை படைத்து பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.
அப்போது வெயில் அதிகமாக அடித்ததால் அம்மன் சப்பரத்தை தூக்கி வந்த பக்தர்கள் மற்றும் வாத்தியக்குழுவினருக்கு மோர், குளிர்பானங்களை அந்த பகுதியில் வீடுகளில் உள்ளவர்கள் கொடுத்து உபசரித்தனர்.
சிக்கரசம்பாளையம் பகுதியில் வீதி உலா முடிந்ததும், அம்மனின் சப்பரம் நேற்று இரவு சிக்கரசம்பாளையம் புதூர் கிராமத்தை சென்றடைந்தது.
Related Tags :
Next Story