நம்பியூர் அருகே பரபரப்பு மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி; மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்


நம்பியூர் அருகே பரபரப்பு மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி; மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 10 March 2022 2:32 AM IST (Updated: 10 March 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் செத்தன. அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நம்பியூர்
நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் செத்தன. அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். 
விவசாயி
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சங்கர். விவசாயி. இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு அந்த பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. சங்கர் அந்த தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார். கால்நடைகளை அடைப்பதற்காக பட்டி அமைத்து உள்ளார். தோட்டத்து பகுதியில் பகலில் கால்நடைகளை மேய்த்துவிட்டு இரவில் அங்குள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். பின்னர் ஊருக்குள் உள்ள வீட்டுக்கு இரவில் சென்றுவிடுவார்.
நாய் குரைத்தது
சங்கர் நேற்று முன்தினம் வெளியூர் சென்றுவிட்டார். இதனால் மாலையில் அவருடைய மனைவி தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் கால்நடைகளை அடைத்து விட்டு ஊருக்குள் உள்ள வீட்டுக்கு தூங்க சென்றுவிட்டார். 
நேற்று அதிகாலை 3 மணி அளவில் தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் சத்தம் போட்டன. மேலும் நாய் குரைக்கும் சத்தமும் கேட்டது. இதனால் அருகில் உள்ள தோட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழரசிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். 
கடித்து குதறப்பட்ட நிலையில்...
தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினரை அழைத்து கொண்டு தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டிக்கு தமிழரசி வந்தார். அப்போது 2 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஒரு ஆடு கடிபட்ட நிலையில் காயத்துடன் நின்று கொண்டிருந்தது. அதிகாலையில் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு, 2 ஆடுகளை கடித்து குதறி கொன்றுவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி மர்ம விலங்கு கடித்ததில் காயமடைந்த ஆடு ஒன்று தப்பி ஓடி அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து கிடந்ததையும் அவர் பார்த்தார். இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆட்டை மீட்டனர். ஆனால் அந்த ஆடும் இறந்துவிட்டது. 
இதுபற்றி டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் பதிவான கால் தடங்களையும் ஆய்வு செய்தனர். எனினும் எந்த விலங்கின் கால்தடம் என்பதை வனத்துறையினரால் உறுதி செய்ய முடியவில்லை.
இதைத்தொடர்ந்து இறந்த ஆடுகளை கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்காக வனத்துறையினர் அந்த பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
பொதுமக்கள் அச்சம்
நம்பியூர் பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளை கொன்று வந்தது. இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் அதிநவீன தெர்மல் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் சிறுத்தை பிடிபடவில்லை.  
இந்தநிலையில் மீண்டும் ஆடுகளை கடித்து கொன்றது சிறுத்தையாக இருக்குமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளனர். 

Next Story