கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை அள்ளிய மக்கள்


கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை அள்ளிய மக்கள்
x
தினத்தந்தி 10 March 2022 3:01 AM IST (Updated: 10 March 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில், கண்மாயில் இறங்கி போட்டி போட்டு கிராம மக்கள் மீன்களை அள்ளினர்.

மேலூர்,

மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில், கண்மாயில் இறங்கி போட்டி போட்டு கிராம மக்கள் மீன்களை அள்ளினர்.

மீன்பிடி திருவிழா

  இன்றைய காலக்கட்டத்தில் நகரங்களில் ஒரே வீட்டில் வசித்தாலும் ஒருவருக்கொருவர் பேச கூட நேரமில்லாமல் அலுவல், கல்வி என பிரிந்து வாழ்கிறோம். ஆனால்.. கிராமங்கள் இன்னும் தனித்துவமாக திகழ்வதற்கு நமது பண்பாட்டை பின்பற்றி நடைபெறும் விழாக்கள் முக்கிய காரணம்..
  அதிலும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பாரம்பரியமாக நடைபெறும் மீன்பிடி திருவிழா சிறப்பு பெற்றது.
  மீன்பிடி திருவிழா என்பது கண்மாய், குளங்கள், குட்டைகளில் தண்ணீர் வற்றியவுடன் ஊர்மக்கள் ஒன்று திரண்டு அதில் உள்ள மீன்களை பிடிப்பார்கள். பின்னர் வீடுகளுக்கு கொண்டு சென்று மீன்குழம்பு வைத்து, சாமி கும்பிட்டு சாப்பிட்டு மகிழ்வார்கள். ஆண்டு முழுவதும் தண்ணீர் தந்த குளம், குட்டை, கண்மாய்க்கு நன்றி செலுத்தும் திருவிழா தான் இது.

களை கட்டிய மீன்பிடி திருவிழா

  இந்த வகையில் நேற்று காலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயில் மீன்பிடி திருவிழா களை கட்டியது. இதில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
  பாரம்பரிய வழக்கப்படி கிராமத்தின் சார்பில் துண்டு வீசப்பட்டது. அதன்பிறகு கண்மாய் கரையில் கூடியிருந்தவர்கள், கண்மாய் தண்ணீரில் இறங்கி மீன்களை ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பிடிக்க தொடங்கினர். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை அள்ளினர்.

நாட்டு வகை மீன்கள்

  கூடைகள், வலைகள், கச்சா ஆகியவைகளை பயன்படுத்தி கெழுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி, உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். மீன்கள் சரிவர கிடைக்காதவர்களுக்கு, அதிக மீன்கள் பிடித்த பொதுமக்கள் தங்களிடம் இருந்த மீன்களை கொடுத்து உதவினர்.
  இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கூறும் போது, “கண்மாயில் பிடித்த மீன்களை விற்பனை செய்வது தெய்வகுற்றம் என காலம் காலமாக நம்பி வருகிறோம். ஆதலால் மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை வீ்ட்டுக்கு சென்று சமைத்து சாப்பிடுவோம்” என்றார்.
  இதனால் சருகுவலையபட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு சமையல் நேற்று ‘கமகம’த்தது.
  ---------


Next Story