சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து விபத்து; 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம்
சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம் ஆனது.
சென்னிமலை
சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம் ஆனது.
கோழி முட்டைகள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனந்தபூர் பகுதியில் இருந்து 1 லட்சம் கோழி முட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று கோவை மாவட்டத்துக்கு சென்று கொண்டிருந்தது.
கோவை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை அட்டை பெட்டிகளில் அடுக்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
லாரி கவிழ்ந்தது
லாரியை பெங்களூருவை சேர்ந்த சங்கர் (வயது 38) என்பவர் ஓட்டினார். கிளீனராக ஜெயராம் (27) என்பவர் இருந்தார். லாரியானது நேற்று காலை 6.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் ரோட்டில் கணுவாய் என்ற இடத்தில் சென்றபோது அங்குள்ள வளைவில் திரும்பியது.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரி நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் சங்கரும், கிளீனர் ஜெயராமும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
நாசம்
மேலும் இந்த விபத்தில் லாரியில் உள்ள அட்டை பெட்டிகள் சிதறியதுடன், அதில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் கோழி முட்டைகளும் உடைந்து நாசம் ஆனது. பின்னர் மாற்று வாகனம் கொண்டு வரப்பட்டு உடையாத முட்டைகள் அதில் ஏற்றப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்த அதே இடத்தில் ஏற்கனவே 8 விபத்துகள் நடந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிமேல் விபத்து நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் வளைவு உள்ள இடத்தில் அதுகுறித்த அறிவிப்பு பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story