அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
x
தினத்தந்தி 10 March 2022 4:20 PM IST (Updated: 10 March 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் கைது செய்யப்பட்டார்.


புகார் மனு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த தத்தலூர் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி சம்பத் (வயது 69), செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எம்.எஸ்சி. படித்து முடித்துள்ள எனது மகன் செல்வத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு வேலை தேடி வந்தேன். அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த திருக்கழுக்குன்றம் கொத்திமங்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் புருஷோத்தமன், சென்னையில் உயர் அதிகாரிகள் எனக்கு நெருக்கம். அவர்கள் மூலம் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்றார்.

இதையடுத்து சென்னையை அடுத்த கீழ்கட்டளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் தலைமை செயலகத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பதாக கூறி அவரை அறிமுகம் செய்து வைத்தார். எனது மகனுக்கு வேலை வாங்கி தருவதற்காக அவரிடம் ரூ.6 லட்சத்தை வாங்கி கொடுத்தார்.

ரூ.1¼ கோடி மோசடி

இதற்கடையில் நாகராஜன் ரூ.500 கோடி அரசு நிலத்தை அபகரித்ததாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை அறிந்து கீழ்க்கட்டளையில் உள்ள நாகராஜன் வீட்டுக்கு சென்றேன். அங்கு என்னை போல் புருஷோத்தமன் மூலம் பணத்தை கொடுத்து ஏமாந்த 15-க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

மேலும் புருஷோத்தமன், நாகராஜ் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து என்னைபோல் மொத்தம் 15 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில் நாகராஜன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது மகன் தினேஷ் தலைமறைவாகிவிட்டார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமனை கைது செய்த செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story