தூத்துக்குடியில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
காத்திருக்கும் போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை காத்திருக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்ட செயலாளர் புவிராஜ் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். போராட்டத்தில் 2020-21-ம் ஆண்டு பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், நடப்பு பருவத்தில் தொடர் மழையால் அழிந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், விளாத்திகுளம், வேம்பார் பிர்க்காக்களில் உள்ளி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கும், மற்ற பிர்க்காக்களில் வழங்கியது போன்று பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராமசுப்பு, துணைத்தலைவர்கள் சீனிவாசன், கணபதி, கிருஷ்ணன், நடராஜன், துணை செயலாளர்கள் சங்கரன், பாலகிருஷ்ணன், மணி, மணி என்ற சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், இன்சூரன்சு நிறுவனத்தினர் பங்கேற்றனர். அப்போது, 07.03.33 அன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2020-21-ம் ஆண்டு ராபி பருவ மக்காச்சோள பயிருக்கு 31 ஆயிரத்து 41 பதிவுகளுக்கு ரூ.20 கோடியே 45 லட்சம் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதன் முழுவிவரமும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மூலம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும். மக்காச்சோளம் காப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், வேளாண்மை துறை மூலம் சரி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மீதம் உள்ள பயிர்களுக்கான காப்பீட்டு தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் பங்கு தொகை 20 நாட்களுக்குள் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதன் தொடர்ச்சியாக 2-வது தவணை காப்பீட்டு தொகை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story