கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்-நாளை மறுநாள் நடக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற உள்ளது. இதில் விவாகரத்து வழக்கு தவிர மற்ற மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமாதானமாக போகக்கூடிய குற்றவியல் வழக்குகள் நீதிபதிகளை கொண்டு அமர்வுகளை ஏற்படுத்தி தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படுவதால், முத்திரை தாள் மூலம் செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெறும் வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது.
சமரச தீர்வு
எனவே, வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது சட்டப்பணிகள் குழுவிடமோ தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story