பள்ளி வகுப்பறையில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவன் காயம்
சென்னை கே.கே.நகர் பள்ளி வகுப்பறையில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவன் காயம் அடைந்தார்.
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மகன் அஸ்வத்கமல்(வயது 9). அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 8-ந் தேதி அன்று பிற்பகலில் மாணவர்கள் வகுப்பறையில் இருந்த போது, மின்விசிறி ஒன்று கழன்று கீழே விழுந்து விட்டது. கழன்று விழுந்த மின் விசிறி மாணவன் அஸ்வத்கமல் தலையில் விழுந்து விட்டது. மாணவன் ‘அம்மா’ என்று அலறியபடி சாய்ந்து விட்டான். பின்னர் மாணவன் சகஜ நிலைக்கு திரும்பி, பள்ளி முடிந்து வீட்டுக்கும் வந்து விட்டான். ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் இது குறித்து பெற்றோருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிக்கும் அழைத்து சென்று உரிய சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த மாணவன் தலை வலிப்பதாக கூறினான். வகுப்பறையில் மின்விசிறி கழன்று தனது தலையில் விழுந்தது பற்றியும் பெற்றோரிடம் தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். பள்ளி நிர்வாகம் உரிய தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், இதனால் மாணவனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story