7 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமை பெறாத சமுதாயக்கூடம் கட்டுமான பணி
புங்கனூர் ஊராட்சியில் 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணி முழுமை பெறாத நிலையில் உள்ள சமுதாயக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் மக்கள் வேதனையில் உள்ளனர்.
சீர்காழி:-
புங்கனூர் ஊராட்சியில் 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணி முழுமை பெறாத நிலையில் உள்ள சமுதாயக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் மக்கள் வேதனையில் உள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியாக புங்கனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் காடாகுடி கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் இதுவரை சமுதாயக்கூடம் கட்டும் பணி முழுமை பெறவில்லை. பாதியில் கைவிடப்பட்ட சமுதாயக்கூட கட்டிடம் முன்பு புதர்கள் மண்டி கிடக்கின்றன.
அங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக முழுமை பெறாமல் உள்ள சமுதாயக்கூட கட்டுமான கட்டிட பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
செலவு மிச்சமாகும்
புங்கனூர் ஊராட்சியில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயன் உள்ளதாக இருக்கும். கிராம மக்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் விழாக்களை சமுதாயக்கூடத்தில் நடத்தும்போது செலவும் மிச்சமாகும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பாதியில் கைவிடப்பட்ட கட்டுமான பணியை மீண்டும் தொடங்கி கட்டிட பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமுதாயக்கூடத்தை திறந்து விட வேண்டும்.
உடனடியாக கட்டிடம் முன்பு உள்ள புதர்களை அகற்றி, சமூக விரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
Related Tags :
Next Story