பள்ளிப்பட்டில் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
பள்ளிப்பட்டில் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியை சேர்ந்த ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் யானைகள் கூட்டம் ஒன்று தஞ்சம் புகுந்து அட்டகாசம் செய்தது. இந்த கூட்டத்தில் 3 யானைகள் இருந்தன. இந்த யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்க பள்ளிப்பட்டு வனத்துறை அலுவலர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து போராடினார்கள். பட்டாசுகளை வெடிக்க செய்தும், டமாரங்களை அடித்தும் அவர்கள் யானைகளை விரட்ட முயற்சித்்தனர். காலை முதல் மாலை வரை யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியே வரவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறின. அவை கல்லாமேடு, கொளத்தூர் பகுதிகளைத் தாண்டி ஆந்திர மாநில வனப் பகுதிக்குள் நுழைந்தன. தற்போது சித்தூர் மாவட்டம், கார்வேட்டி நகரம் மண்டலம், டி.எம். புரம் கிராம வனப்பகுதிக்குள் நுழைந்தன. பள்ளிப்பட்டு வன அலுவலர் சரவணன் அந்த பகுதிக்கு சென்று ஆந்திர மாநில வன அலுவலரை சந்தித்து அந்த பகுதி நிலவரத்தை நேரில் பார்வையிட்டார். அந்த பகுதியில் முகாமிட்ட யானைகள் அங்கு இருந்து புத்தூர் வழியாக திருப்பதி வனப்பகுதிக்கு சென்று விட்டதாக ஆந்திர வனத்துறையினர் தெரிவித்தனர். இனி அந்த யானைகள் திரும்பவும் பள்ளிப்பட்டு பகுதிக்கு வரக்கூடிய சூழ்நிலை இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story