திருப்பத்தூர் அருகே 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த எழுத்துடை நடுகல் கண்டு பிடிப்பு


திருப்பத்தூர் அருகே 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த எழுத்துடை நடுகல் கண்டு பிடிப்பு
x
தினத்தந்தி 10 March 2022 9:52 PM IST (Updated: 10 March 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த எழுத்துடை நடுகல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த எழுத்துடை நடுகல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்திகூறியதாவது:-

நடுகல்

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கொரட்டி கிராமம் திருப்பத்தூர்-சேலம் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள  ஏரி தெற்குக்கரையில் திக்கியம்மன் என்னும் பெயரில் கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அதாவது 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்துக்களுடன் கூடிய நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநடுகல் 5 அடி அகலமும் 3 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான பலகைக் கல்லில் எழுத்துக்களுடன் காணப்படுகிறது. நேர்த்தியான கல் தச்சனைக் கொண்டு நடுகல் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் நோக்கிய வண்ணம் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வட்டெழுத்து

வாரிமுடிக்கப்பட்ட தலைக் கொண்டை வலது பக்கம் சாய்ந்து காணப்படுகிறது. வலது கையில் குறுவாள் ஒன்றை நடுகல் வீரன் வைத்துள்ளான். இடது கையில் அழகிய கோலத்துடன் வில் காணப்படுகிறது. இவ்வீரனின் கழுத்தில் ஒரு அம்பும், மார்பில் ஒரு அம்பும் பாய்ந்துள்ள கோலத்துடன் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடுகல் எழுத்துக்கள் ஏழு வரிகளில் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்தின் ஒருவகையான வட்டெழுத்துகள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை தொல்லியல் அறிஞர் அர.பூங்குன்றன் வாசித்துக் கூறினார்.
பெரும்பாண அரசரின் வீரன் ஆலம்பட்டி ஆட்டு மந்தையைக் கவர்ந்து செல்ல பெரியந்தை நீலனார் என்ற வீரன், ஆட்டு மந்தையை மீட்டு இறந்தான் என்று இந்தநடுகல் வாசகம் எடுத்துரைக்கிறது.

திக்கியம்மன்

இந்தநடுகல் வாசகம் புதிய சில வரலாற்றுச் செய்திகளை பற்றி பேசுகிறது. பெரும்பாணர் என்ற அரச பரம்பரையினரைப் பற்றி திருப்பத்தூர் பகுதியில் வரும் முதல் நடுகல் இதுதான். மேலும், மாட்டு மந்தையைப் பற்றி பல நடுகற்கள் பேச, இந்தநடுகல் ஆட்டு மந்தையைப் பற்றி பேசுகிறது. ஆநிரைகள் (மாடு, ஆடு) தங்கும் இடத்தைக் குறிக்கும் பட்டி (ஆலம்பட்டி) என்ற சொல் அரிதினும் அரிதாக இந்த நடுகல்லில் காணப்படுகிறது.

இந்த நடுகல்லை தற்போது திக்கியம்மன் என்னும் பெயரில் ஆடி மாதம் ஊர் மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட படையல்களை வைக்கின்றனர்.

Next Story