நடிகர் சூர்யா நடித்த திரைப்படத்தை வெளியிட பா.ம.க.வினர் எதிர்ப்பு
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு செஞ்சியில் பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
செஞ்சி,
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் 10-ந்தேதி(அதாவது நேற்று) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் தொடர்பாக, எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடக்கூடாது என்று பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையொட்டி அனைத்து தியேட்டர்களிலும் நேற்று முன்தினம் முதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது.
பா.ம.க. எதிர்ப்பு
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைவீதியில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சூர்யா ரசிகர்கள் நேற்று காலை முதலே தியேட்டருக்கு வரத்தொடங்கினர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த செஞ்சி நகர பா.ம.க. செயலாளர் சின்னத்தம்பி தலைமையிலான நிர்வாகிகள் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் தொடர்பாக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் குவிப்பு
திரைப்படம் வெளியிட எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, படம் வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாக தியேட்டர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று அந்த தியேட்டரில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகவில்லை. இதன் காரணமாக திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்திருந்த சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பா.ம.க.வினரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இருப்பினும் அங்கு செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story