ஆதிதிராவிடா் சமூக மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்
ஆதிதிராவிடா் சமூக மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஆவணங்களை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இங்குள்ள ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்றும், இதற்காக பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அரசு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. பெடரேஷன் அமைப்பாளர் ஆடிட்டர் தனசேகர், மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, பொதுச்செயலாளர் துரை, பொருளாளர் ஆனந்த், தொகுதி தலைவர் மனோகர், விழுப்புரம் நகர தலைவர் வசந்தகுமார், மகளிர் அணி நகர செயலாளர் தேன்மொழி, காணை ஒன்றிய தலைவர் தண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆவணங்களை ஒப்படைக்க முயற்சி
இவர்கள் அனைவரும், ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வரும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளே சென்றனர். உடனே அவர்களை விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், செல்வராஜ் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுபற்றி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைவரும், தங்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story