திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்புவனம்,
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் உள்ளிட்ட சமய புலவர்களால் பாடப்பெற்ற புகழ்பெற்ற கோவிலாகும். மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் இங்கு நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது. அப்போது புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு கொடிமரம் அருகில் கொண்டு வரப்பட்டது. பின்னர் தெய்வசிகாமணி பட்டர் 4-வது ஸ்தானீகம் வகையறா முன்னிலையில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பிறகு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிப்பார். மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம், மறுநாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
சிவகங்கை கோவில்
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சிவகங்கை விசுவநாத சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டும் இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது, இதையொட்டி தினசரி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
8-ம் திருநாளான 16-ந் தேதி மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 17-ந் தேதி மாலை நாலரை மணிக்கு மேல் ஐந்தரை மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story