ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி அபேஸ்


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி அபேஸ்
x
தினத்தந்தி 11 March 2022 1:43 AM IST (Updated: 11 March 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 9 பவுன் தாலிச் சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழித்துறை:
மார்த்தாண்டத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 9 பவுன் தாலிச் சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்
புதுக்கடை அருகே உள்ள பார்த்திவபுரம் பெரியவிளையை சேர்ந்தவர் ஜெயலெட் சேம். இவருடைய மனைவி ரெஜின்மேரி (வயது 44). இவர் மார்த்தாண்டம் வெட்டுமணியில் பத்திர எழுத்து அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலையை முடித்துவிட்டு பஸ்சில் வீட்டுக்கு சென்றார். வெட்டுமணியில் இருந்து ரெஜின்மேரி தேங்காப்பட்டணம் செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது காப்புக்காடு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென தனது கழுத்தில் கிடந்த 9¾ பவுன் தாலிச்சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு ரெஜின் மேரி திடுக்கிட்டார். உடனே பதறியபடி எனது சங்கிலியை காணவில்லை என்று பஸ்சில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். உடனடியாக பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. 
9 பவுன் சங்கிலி அபேஸ்
இதையடுத்து பஸ்சுக்குள் தேடியபோது தாலி சங்கிலியில் கிடந்த ¾ பவுன் எடையுள்ள டாலர் மட்டும் கிடைத்தது. தாலி சங்கிலியை மர்ம ஆசாமி அபேஸ் செய்த போது டாலர் மட்டும் கீழே விழுந்திருக்கிறது. மீதமுள்ள 9 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர் அபேஸ் செய்து தப்பி சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து ரெஜின்மேரி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை தேடி வருகிறார்.

Next Story