மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 157 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை
மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 157 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் பெரம்பலூர் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் பிறப்பு முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி முன்னிலையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் 157 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களை மனநல மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், ஆர்.பி.எஸ்.கே. மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்தனர். இதில் 29 பேருக்கு உதவி உபகரணங்களுக்காகவும், 2 பேர் அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்காக 19 பேரின் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் வருவாய் துறை மற்றும் அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியருடன் ஒருங்கிணைந்து இ-சேவை மையங்கள் மூலம் வருமான சான்று விவரங்கள் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 42 மாற்றுத்திறனாளிகளின் விவரம் பதிவேற்றப்பட்டது. 6 மாற்றுத்திறனாளிகளுக்கு எல்காட் மூலம் ஆதார் அட்டை எடுக்கப்பட்டது. மாற்றுத்திறனுடைய மாணவர்களில் 23 பேருக்கு புதிதாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் கல்வி மாவட்ட அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன் (வேப்பூர்), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வேப்பூர் ஒன்றியத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு வருகிற 16-ந்தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு 17-ந்தேதி வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.
Related Tags :
Next Story