ஓடையாக மாறிய வள்ளியாறு


ஓடையாக மாறிய வள்ளியாறு
x
தினத்தந்தி 11 March 2022 2:07 AM IST (Updated: 11 March 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பால் தோற்றத்தை இழந்து ஓடையாக மாறிய வள்ளியாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தக்கலை:
 மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பால் தோற்றத்தை இழந்து ஓடையாக மாறிய வள்ளியாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
வள்ளியாறு
குமரி மாவட்டத்துள்ள ஆறுகளில் ஒன்று வள்ளியாறு.  முட்டைக்காடு அருகே வேளிமலையில் குரங்கேற்றி பகுதியில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஆறு பல்வேறு கிளைகளாக பிரிந்து குழிவிளை வழியாக பூதமடையில் ஒன்று சேர்ந்து மீண்டும் பெரிய ஆறாக கொக்கோட்டு மூலையில் பாய்கிறது. 
பின்னர், முட்டைக்காடு, சரல்விளை, கீழமூலச்சல், பத்மநாபபுரம், கொல்லன்விளை, இரணியல், குன்னங்காடு, மணவாளக்குறிச்சி வழியாக கடியப்பட்டணம் பொழிமுகத்தில் கடலில் கலக்கிறது. 
பாசன வசதி
வள்ளியாற்றின் மூலம்  சாரோடு, கொல்லன்விளை, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 
பல்வேறு இடங்களில் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மணல் கொள்ளை
சுமார் 23 கி.மீட்டர் தூரம் நீளம் கொண்ட வள்ளியாறு தற்போது பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னை, வாழை, மா, பலா போன்ற மரங்களை நட்டுள்ளதால் ஓடைபோல் காணப்படுகிறது. மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் ஏற்படுகிறது.
மேலும், மர்ம கும்பல் ஆற்றில் மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், வள்ளியாறு தனது தோற்றத்தையும், வளத்தையும் இழந்து வருகிறது. 
விவசாயிகள் கோரிக்கை
எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மணல் கொள்ளையை தடுப்பதுடன், கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story