மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத் திருவிழா


மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத் திருவிழா
x
தினத்தந்தி 11 March 2022 2:11 AM IST (Updated: 11 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மலைக்கோட்டை
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி கோவிலுக்கு சென்று மனமுருகி சிவனை வழிபட்டால் கர்ப்பிணிகளுக்கு சுகபிரசவத்தில் குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திரத்திற்கு முந்தையநாளில் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  
அதன்படி வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் மாலை மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா தொடங்கியது. முன்னதாக தாயுமான சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மேளதாளங்கள் முழங்க ரிஷபக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாகனங்களில் புறப்பாடு
தெப்பத்திருவிழா தொடங்கியதையடுத்து தினமும் சுவாமி, அம்பாள் முறையே கற்பக விருட்ச வாகனம், பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை, தங்க குதிரை வாகனங்களில் புறப்பாடாகி வீதியுலா செல்கின்றனர். இதில், முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வருகிற 17-ந்தேதி இரவு நடைபெறுகிறது.அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதனைத்தொடர்ந்து 18-ந்தேதி தீர்த்தவாரியும், இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
 விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். தெப்பத்திருவிழாவையொட்டி வழக்கமாக தெப்பக்குளத்தை சுற்றி வர்ணம் அடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருப்பது பக்தர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story