தந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மகன் கைது
தா.பேட்டை அருகே சொத்து தகராறில் தந்தை மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
தா.பேட்டை
தா.பேட்டை அருகே உள்ள ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முத்துவேல் (வயது 60). இவருக்கு சாந்தகுமார் (36), முரளிதரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதில், மூத்தமகன் சாந்தகுமார் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இளையமகன் முரளிதரன் மனைவியுடன் தந்தையுடன் வசித்து வருகிறார். முரளிதரன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரது பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்காக அனுப்பி வைத்துள்ளார்.
மூத்த மகன் சாந்தகுமாருக்கும், தந்தை முத்துவேலுவிற்கும் சொத்தை பிரித்து பணம் கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
எரித்து கொல்ல முயற்சி
இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த சாந்தகுமார், அன்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை முத்துவேல் மீது பாட்டிலில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்.
இதில் தீக்காயமடைந்த முத்துவேலின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த தகவலின்பேரில், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சாந்தகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை மகன் எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story