கண் அழுத்த நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?
கண் அழுத்த நோயில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
மதுரை,
கண் அழுத்த நோயில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
உலக கண் அழுத்த நோய்
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் கண் மருத்துவத்துறை சார்பில் கடந்த 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை உலக கண் அழுத்த நோய் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும், கண் அழுத்த நோய் குறித்த காணொலி காட்சி மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 2-ம் நாளில் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் அழுத்த நோய்க்கான நவீன கருவிகள் மூலம் கண் பரிசோதனை நடந்தது.
கண்காட்சி
3-வது நாளில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பொது மக்களுக்கான கண் அழுத்த நோய் கண்காட்சி நடைபெற்றது. இதனை டீன் ரத்தினவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கண் அழுத்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம். காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் கண் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
இதில், இணைப்பேராசிரியர் ரவீந்திரன், மருத்துவக் கண்காணிப்பாளர் மற்றும் நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
நோய்க்கான காரணம் என்ன?
இதுகுறித்து துறை தலைவர் விஜயசண்முகம் கூறுகையில், "கண் அழுத்த நோயானது, பார்வை நரம்பு சேதமாவதால், கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனால் வருகிறது. வயது முதிர்வு, அதிக ரத்த அழுத்தம், ஏற்கனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு, அதிக தடுப்பூசிகள் எடுத்து கொள்வது போன்ற காரணங்களால் வருகிறது. இதனை மருந்துகள் மூலம் தடுக்க முடியும். கண் அழுத்த நோயை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் தேவையற்ற பார்வைக் குறைப்பாட்டைத் தடுக்கலாம்.
குறிப்பாக அந்த நரம்புகள் பாதிக்கப்படாமல் கவனித்தால், பார்வை குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் மட்டுமே சரி செய்ய முடியும். கண் மங்கலமாக தெரிவது, கண்ணில் வலி, கண்ணில் உறுத்தல் போன்றவை அறிகுறிகளாக இருக்கிறது. சிலநேரங்களில், நோயால் பாதிக்கப்பட்டவர்களே இதனை அறிந்து கொள்ள காலதாமதம் ஏற்படும். சத்தமில்லாமல் கண்ணை பாதிக்கும் ஒரு நோய் எனலாம். 40 சதவீதம் நோய் வந்த பின்னரே நோயாளிக்கு அந்த நோய் வந்திருப்பது தெரிகிறது. எனவே எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்ணின் நரம்புகள், ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் முழுமையாக பாதிக்கப்பட்டால் கண் பார்வை முழுமையாக போய்விடும்" என்றார்.
Related Tags :
Next Story