பள்ளி மாணவிகள் கல்வியோடு தற்காப்பு கலைகளையும் கற்க வேண்டும்; நீதிபதி பேச்சு
பள்ளி மாணவிகள் கல்வியோடு தற்காப்பு கலைகளையும் கற்க வேண்டும் என்று நீதிபதி பேசினார்.
குன்னம்:
விழிப்புணர்வு முகாம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ெபரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இணைந்து சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் வழிகாட்டுதலின்பேரில் நடந்த இந்த முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், பார் போற்றும் வகையில் இன்னும் அனைத்து படிநிலைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும். கல்வியில் இன்னும் பல சாதனைகளை நாம் அடைய வேண்டும். தொடர் முயற்சிகளால், சட்டத்தின் மூலமாகவே பெண்கள் இன்றளவில் பெருமைகொள்ளும் நிலையை அடைந்திருக்கிறார்கள். எனவே சட்டத்தின் மூலம் பெண்களுக்கான உரிமைகளை பெறுவதற்கு பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் கல்வியோடு, தற்காப்புக் கலைகளையும் கற்று திறம்பட இச்சமூகத்தில் தலைநிமிர்வோடு உயர வேண்டும், என்றார்.
மாணவிகளுக்கு பரிசு
மேலும் அவர், மகளிர் தின பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் கோபிநாத், வழக்கறிஞர் சங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரியா முன்னிலை வகித்தார். முன்னதாக ஆசிரியர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் வையாபுரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story