குடிநீர் கேட்டு போராட்டம்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தா.பேட்டை
முசிறி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால், விரக்தி அடைந்த அப்குதி பொதுமக்கள் நேற்று ஒன்று திரண்டு, பேரூர் கிராமத்தில் காவிரி குடிநீர் வாரம் ஒருமுறை தான் கிடைக்கிறது, இதனால் மற்ற நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எங்கள் பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதான பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் ராஜ்மோகன், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், தாசில்தார்(பொறுப்பு)புஷ்பராணி, காவிரி கூட்டு குடிநீர் வழங்கல் துறை இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா ஜெயபால் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேரூர் பகுதி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவது குறித்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story