முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
துவரங்குறிச்சி
திருச்சி மாவட்டம், வளநாடு முகம்மதியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 56). முன்னாள் ராணுவ வீரரான இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பகுதியில் பூட்டப்பட்டிருந்த பூட்டு அறுக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுடன் அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்களும் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் மற்றும் 24 பட்டுப் புடவைகள் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில், வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு 5 பவுன் நகைகள் திருட்டு போனநிலையில் தற்போது இரண்டாவது முறையாக 25 பவுன் நகைகள் கொள்ளை போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அருகே உள்ள மற்றொரு வீட்டிற்குள்ளும் சென்ற கொள்ளையர்கள் அங்கு ஆட்கள் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story