பெங்களூரு நகர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான புறநகர் ரெயில் திட்டம் கிடப்பில் உள்ளது
பெங்களூரு நகர மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான புறநகர் ரெயில் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. 2 ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் தொடங்கப்படவில்லை
பெங்களூரு: பெங்களூரு நகர மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான புறநகர் ரெயில் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. 2 ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் தொடங்கப்படவில்லை.
புறநகர் ரெயில் சேவை திட்டம்
பெங்களூரு நகரில் வசிக்கும் மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வருவது புறநகர் ரெயில் சேவை திட்டமாகும். இந்த திட்டம் தொடங்கினால் புறநகர் பகுதியில் இருந்து பெங்களூரு நகருக்கு வேலை, படிப்புக்காக வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். ெசன்னை, மும்பை நகரங்களில் உள்ளது போல பெங்களூரு நகரிலும் புறநகர் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று நகர மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பெங்களூரு நகர மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பெங்களூருவில் புறநகர் ரெயில் சேவை திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தது. இதற்காக ரூ.15,767 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தது. இதனால் பெங்களூரு நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
அனுமதி
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி மத்திய ரெயில்வே வளர்ச்சி வாரியம் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கியது. முதல்கட்டமாக 4 மார்க்கங்களில் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டது. அதாவது, கெங்கேரி-ஒயிட்பீல்டு, கே.எஸ்.ஆர். பெங்களூரு-ராஜனகுண்டே, நெலமங்களா-பையப்பனஹள்ளி, தேவனஹள்ளி-ஹெலலிகே இடையே இயக்கப்பட உள்ளது.
அதாவது இந்த 4 மார்க்கங்களிலும் 148.17 கிலோ மீட்டர் தூரத்துக்கு புறநகர் ரெயில் சேவை திட்டம் வகுக்கப்பட்டது. மேலும் இந்த பணிக்காக 6 மாதங்களில் டெண்டர் விடவும் திட்டமிடப்பட்டது.
இந்த பணிக்காக அறிவிக்கப்பட்ட ரூ.15,767 கோடியில் மத்திய, மாநில அரசுகள் தலா 20 சதவீத நிதியை ஒதுக்க முடிவு செய்தது. மேலும், உலக வங்கியிடம் இருந்து 60 சதவீத நிதியை பெறவும் திட்டமிடப்பட்டது.
மக்கள் ஏமாற்றம்
இதன்காரணமாக புறநகர் ரெயில் சேவை எப்போது தொடங்கும் என்று பெங்களூரு நகர மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
‘காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போனதடி...’ என்ற நிலைக்கு பெங்களூரு மக்கள் தள்ளப்பட்டனர். அதாவது, பட்ஜெட்டில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணி தொடங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த திட்டத்துக்கு இன்னும் பூமி பூஜை கூட போடவில்லை. இந்த திட்டம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.
புறநகர் ரெயில் திட்ட பணிகளை இனிமேல் எப்போது தொடங்கி எப்போது முடிப்பார்கள் என்று மக்கள் கவலையில் உள்ளனர்.
2,190 நாட்களில் முடிக்க இலக்கு
பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்துக்கு மத்திய ரெயில்வே வளா்ச்சி வாாியம் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி அனுமதி வழங்கியது. அன்று முதல் மொத்தம் 2,190 நாட்களில் இந்த திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் சுமார் 500 நாட்கள் ஆகியும் புறநகர் ரெயில் சேவை திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் இன்னும் 1,689 நாட்கள் தான் பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story