சிறையில் சொகுசு வசதிகள் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு: பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று ஆஜர்?
பரப்பனஅக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சசிகலா ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
பெங்களூரு:
பரப்பனஅக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சசிகலா ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.2 கோடி லஞ்ச வழக்கு
சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது 3 பேரும் விடுதலையாகி விட்டனர். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்த போது சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீதும் விசாரணை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த லஞ்ச வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணையை முடித்து கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி பெங்களூரு 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள்.
விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
அந்த குற்றப்பத்திரிகையில் சிறை அதிகாரிகளான சோமசேகர், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளரவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, பெங்களூரு 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி இந்த லஞ்ச வழக்கு தொடா்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகள், சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும், இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பும்படியும் நீதிபதி லட்சுமி நாராயண்பட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
சசிகலா இன்று ஆஜர்?
இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு 24-வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயண்பட் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் இன்று விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கோர்ட்டு உத்தரவுப்படி இன்று நடைபெறும் வழக்கு விசாரணையின் போது சசிகலா ஆஜராக இருப்பதாகவும், இதற்காக சென்னையில் இருந்து அவர் பெங்களூருவுக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story