5 மாநில தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்-பசவராஜ் பொம்மை
5 மாநில தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்
பெங்களூரு:
5 மாநில தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாங்கள் பாடுபடுவோம்
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதாவின் இந்த வெற்றி கர்நாடகத்தில் உள்ள கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா மேலும் பலம் அடையும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நல்ல திட்டங்களை அமல்படுத்தி வளமான கர்நாடகத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம்.
அடுத்த ஒரு ஆண்டில் புதிய கர்நாடகத்தை உருவாக்குவோம். அதன் மூலம் வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெறுவோம். கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மோடிக்கு பெரும் ஆதரவு
உத்தரபிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அந்த மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது. அதனால் அபாரமான ஆதரவை மக்கள் வழங்கியுள்ளனர். இதற்காக பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை பாராட்டுகிறேன். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், கொரோனா பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியது போன்ற காரணங்களால் மக்கள்
பிரதமர் மோடிக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. நாட்டில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து வளர்ச்சியை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த முயற்சி மூலம் புதிய இந்தியாவை உருவாக்கும் அவரது கனவு நனவாகிறது. பிரதமர் மோடியால் மட்டுமே நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். அதை இந்த தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) கர்நாடகம் வருகிறார். அப்போது மாநில அரசின் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story