ஜல்லி கலவை உருளை கழன்று ஆட்டோ மீது விழுந்தது


ஜல்லி கலவை உருளை கழன்று ஆட்டோ மீது விழுந்தது
x
தினத்தந்தி 11 March 2022 6:35 PM IST (Updated: 11 March 2022 6:35 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஜல்லி கலவை உருளை கழன்று ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

வேலூர்

வேலூரில் ஜல்லி கலவை உருளை கழன்று ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

ஜல்லி கலவை உருளை 

வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி சிமெண்டு ஜல்லி கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் இன்று சென்றது. 

கலெக்டர் அலுவலகம்- கிரீன்சர்க்கிள் இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சர்வீஸ் சாலையில் லாரி வேகமாக இறங்கியது.

 அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை உருளை திடீரென தனியாக கழண்டு சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது விழுந்தது‌.

இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த பயணி ஒருவர், ஆட்டோ டிரைவர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

லாரியில் இருந்து கழன்று விழுந்த எந்திரம் மற்றும் ஆட்டோவை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.-

காயமடைந்த 2 பேரில் ஒருவர் சத்துவாச்சாரி, வ.உ.சி. நகரை சேர்ந்த அண்ணாமலை என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story