வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதி
வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வேலூர்
வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோடை வெயில்
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. வேலூரில் வெயிலின் கொடுமை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
மார்ச் மாதம் 30-ந்தேதி 106.3 டிகிரியை தொட்டது. தொடர்ந்து வேலூரில் 110 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது மார்ச் மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதன்படி மார்ச் மாதம் 1-ந் தேதி 95.9 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதன் பிறகு சில நாட்கள் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 8-ந்தேதி 94.6 டிகிரியாகவும், 9-ந் தேதி 97.3 டிகிரியாகவும், நேற்றுமுன்தினம் 97.5 டிகிரியாகவும் வெயில் அளவு பதிவாகி உள்ளது.
தர்பூசணி விற்பனை
இதனால் பகல் நேரத்தில் சாலையில் மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.
கண் எரிச்சல், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. இன்னும் சில நாட்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி விடும், அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடும் வெயிலால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வற்ற தொடங்கி விட்டன. வேலூர் மலைக்காடுகளில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வாடி விட்டது. மதிய வேளையில் வேலூர் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும்போது வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகள் குடைகளை பிடித்துக் கொண்டு சென்றனர்.
பலர் தாகத்தை தணிக்க குளிர்பான கடைகளுக்கும், பழக்கடைகளுக்கும் சென்றும் குளிர்பானம், பழங்களை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
இதனால் அங்கு வியாபாரம் களைகட்டி வருகிறது. நகரின் பல பகுதிகளில் தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக நடக்கிறது.
பொதுமக்கள் கலக்கம்
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கோடைக்கால நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
எனவே தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இனி வரும் நாட்களில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story