தூத்துக்குடியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
தூத்துக்குடியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாம்
மக்களுக்கு அனைத்து மருத்துவ சேவைகளும், அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 4 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் முதலாவது சிறப்பு மருத்துவ முகாம் நேற்று மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள பாத்திமாநகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பாத்திமாநகர் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்தது. முகாமுக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
உன்னதமான திட்டம்
அப்போது, ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வருமுன் காப்போம் என்ற உன்னதமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். தற்போது தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மருத்துவ வசதிகளும் மக்கள் இருக்கும் இடத்துக்கே தேடி வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 60 வார்டுகளிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். தற்போது 25 வயது உடையவர்களுக்கே ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை வருகிறது. இதனை தடுக்க நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். தேவையின்றி வாகனங்களில் செல்வதை தவிர்த்து நடந்து செல்வதை அதிகரிக்க வேண்டும். இதனால் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்பட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, தோல்நோய் சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டு மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இதில் மேல் சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த மருத்துவ முகாம் மாலை 4 மணி வரை நடந்தது. முகாமில் பாத்திமாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 350 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) ஆர்த்தி, டாக்டர் தினேஷ், உதவி செயற்பொறியாளர் சரவணன், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story