வெற்றி கொண்டாட்டத்தின்போது உயிரிழந்த தி.மு.க. பிரமுகர் குடும்பத்திற்கு நிதியுதவி
வெற்றி கொண்டாட்டத்தின்போது உயிரிழந்த தி.மு.க. பிரமுகர் குடும்பத்திற்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் நிதியுதவி வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கோட்டை பகுதியை சேர்ந்தவர் பயாஸ் (வயது 40). தி.மு.க. பிரமுகர். இவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1-வது வார்டு தி.மு.க. முகவராக பணியாற்றினார். கடந்த மாதம் 22-ந் தேதி கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது வாக்கு எண்ணும் மையம் முன்பு தி.மு.க.வினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முகவர் பயாஸ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தி.மு.க.வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உயிர் இழந்த தி.மு.க. பிரமுகர் பயாஸ் வீட்டிற்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப் ஆகியோர் நேரில் சென்று அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்கள்.
இதில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், தொண்டர் அணி நிர்வாகி கனல் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் லியாகத், தி.மு.க. பிரமுகர்கள் அத்தாவுல்லா, இதயத்துல்லா, அமீர் சுகேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story