ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு
ஓராண்டுக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப் பிடிப்பு நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
ஊட்டி
ஓராண்டுக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப் பிடிப்பு நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
சினிமா படப்பிடிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மலைப்பிரதேசமான ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்குபின் அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு அனுமதியுடன் நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பூங்காவில் தமிழ் சினிமா படம் எடுக்கப்பட்டது.
ஓராண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்காலிக கூடாரம்
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், நடிகர் முகின் ராவ், நடிகை ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் காட்சிகள் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் படமாக்கப்பட்டது.
இதற்காக மைதானத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டன. மைதானத்தில் அமைக்கப்பட்ட கல்லறையில் நடிகர் முகின் ராவ் அஞ்சலி செலுத்துவது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதில் காரில் செல்வது போல் காட்சியும் இடம்பெற்றது.
சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
பூங்காவுக்கு வந்திருந்த வெளிமாநில, பிற மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சினிமா படப்பிடிப்பு நடப்பதை கூடி நின்று பார்த்து ரசித்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடந்தது.
இதுகுறித்து படப்பிடிப்பு குழுவினர் கூறும்போது, பெயரிடப்படாத திரைப் படம் இயற்கை காட்சிகள் நிறைந்த ஊட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, கோத்தகிரியில் சில நாட்கள் காட்சிகள் எடுக்கப்படுகிறது என்றனர்.
Related Tags :
Next Story